×

இந்த தேர்தலில் நோட்டாவுக்கு யாரும் வாக்களிக்க முடியாது: யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை அறியும் வி.வி., பேட் வசதியும் கிடையாது

சேலம்: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு இயந்திரங்களில் நோட்டாவும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவி பேட் கருவியும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதில், மாநிலம் முழுவதும் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இத்தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக, அமமுக, பாமக, ேதமுதிக, மநீம, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை போட்டிக் களத்தில் உள்ளன. அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும், வார்டுகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப் பதிவிற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தற்போது, வாக்குப்பதிவிற்கு தேவையான மின்னணு வாக்கு இயந்திரங்களை பிரித்து அனுப்பி, அதில் வேட்பாளர் பெயர், சின்னங்களை பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நோட்டா சின்னம் கிடையாது. வழக்கமாக எம்பி, எம்எல்ஏ தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்றால், வாக்காளர்கள் நோட்டாவிற்கு வாக்களிக்க வசதி இருக்கும். ஆனால், தற்போது மாநில தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் உள்ளாட்சி தேர்தல் என்பதால், நோட்டா சின்னம் கிடையாது. அதேபோல், யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் வி.வி., பேட் கருவியும் இத்தேர்தலில் பயன்படுத்தப்படாது. அந்த கருவியும் வாக்குப்பதிவின்போது இருக்காது. எம்பி, எம்எல்ஏ தேர்தலின் போது, வாக்காளர்கள் தங்களது வாக்கை செலுத்தியதும், முன்பகுதியில் தனியாக வைக்கப்பட்டிருக்கும் விவி பேட் கருவியில் வாக்களித்த சின்னம், வேட்பாளர் பெயர் கொண்ட சீட்டு ரோலராக வருவதை பார்க்க முடிந்தது. அது தற்போது இருக்காது. இதுபற்றி தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ‘இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகின்ற தேர்தல்களில் மட்டும் மின்னணு வாக்கு இயந்திரங்களில் நோட்டா, விவி பேட் பயன்படுத்தப்படும். மாநில தேர்தல் ஆணையங்களால் நடத்தப்படும் உள்ளாட்சி தேர்தல்களில் நோட்டா கிடையாது. வி.வி., பேட் கருவியும் பயன்படுத்தப்படமாட்டாது. அந்த அடிப்படையில் தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நோட்டா, வி.வி., பேட் கிடையாது,’ என்றனர்….

The post இந்த தேர்தலில் நோட்டாவுக்கு யாரும் வாக்களிக்க முடியாது: யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை அறியும் வி.வி., பேட் வசதியும் கிடையாது appeared first on Dinakaran.

Tags : Salem ,Tamil Nadu ,Urban Local Elections ,Vivi ,Dinakaran ,
× RELATED சேலம் உட்கோட்டத்திலுள்ள ரயில்வே...